இந்த பதிவில் “பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்” காணலாம்.
- பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்
- Tamil Proverbs With Meaning
பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்
1.ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்
விளக்கம் – ஊசியை காந்தம் இழுப்பதுபோல, உத்தமனின் அன்பைக் கண்டு அனைவரும் அவனிடம் நட்பு கொள்ள விரும்புவர் என்பது இந்த பழமொழி விளக்கும் கருத்து ஆகும்.
2. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது
விளக்கம் – சோற்று உலையை அனல் குறைவாக வைத்து மூடி போட்டு வெளியில் பொங்கி வராமல் அதனை சமைத்துவிடலாம். ஆனால் நம்மைப் பற்றிய ஒரு ரகசியத்தை ஒருவரிடம் கூறினால்,
அவர் அதனை பத்து பேரிடமாவது கூறினால்தான் அவருக்கு தூக்கம் வரும். அந்த பத்து பேர் மேலும் பலரிடம் கூறுவர். இப்படியாக ஊர் முழுக்க அந்த விஷயத்தைப் பற்றிதான் பேசுவார்கள்.
அதனை தடுத்து உங்கள் ரகசியத்தைக் காக்க முடியுமா? ஊர் வாயை மூட முடியாது. இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
3. இஞ்சி தின்ற குரங்கு போல
விளக்கம் – இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது, குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது, மாங்காய் இஞ்சியைப் போன்றது.
காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு, அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து, கடித்துச் சுவைத்து விடும்.
அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.
4. முதலைக் கண்ணீர் வடிப்பது போல
விளக்கம் – யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள்.
அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது.
அதாவது தொழிலில் பணத்தை போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.
5. படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்
விளக்கம் – நாம் என்னதான் உழைத்தாலும், சொத்து சேர்த்து வைத்தாலும், சொத்தைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாலும் நமக்கென்று நம் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் கடைசிவரை நிலைக்கும்.
Tamil Proverbs With Meaning
6. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
விளக்கம் – காகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி, இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும்.
அதனால் காகம் தனது குஞ்சை வெறுக்குமா? வெறுக்காது. அது தனது குழந்தை அல்லவா? அதைப்போல தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூட, குருடு, செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள்.
7. எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
விளக்கம் – ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.
8. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
விளக்கம் – ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. இயற்கையில் ஒழுங்கு இருந்தால் கண்டிப்பால் அது சிறக்கும்.
9. உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.
விளக்கம் – உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள்
10. வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.
விளக்கம் – ஒரு ஏழை மற்றொரு ஏழையிடம் யாசித்தபோது, இரண்டாவது ஏழை சொன்னது.
Read more from New Tamil Quotes.