இந்த பதிவில் “பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்” காணலாம்.
- பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்
- Proverbs With Meaning In Tamil
பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்
1.கொடுக்குறதோ உழக்குப்பால், உதைக்கிறதோ பல்லுப்போக.
விளக்கம் – ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான எஜமானைக் குறித்து அவன் வேலையாள் சொன்னது தான் இந்த பழமொழி.
2. சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
விளக்கம் – சாஸ்த்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள் – நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாஸ்த்திரங்களின் உண்மைக்குச் சான்று.
ஜோதிடம் என்பது ஆறு வேதங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது என்பது இதன் உண்மை விளக்கம் ஆகும்.
3. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
விளக்கம் – நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும், அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை.
அதுபோல, தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. தன் முதுகு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
4. கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
விளக்கம் – குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களை குறித்துச் சொன்னது இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
5. ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
விளக்கம் – நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றுமே பயனில்லை என்று நொந்து கூறியது தான் இந்த பழமொழி.
இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
6. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
விளக்கம் – விடாமுயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.
7. உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒரு கட்டு விறகில் வேகிறது மேல்.
விளக்கம் – மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.
Proverbs With Meaning In Tamil
8. வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.
விளக்கம் – வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது தான் இந்த பழமொழி.
இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
9. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
விளக்கம் – சமீபத்தில் தெரிந்து கொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவருக்காக கூறுவது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
10. ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று
விளக்கம் – இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள் என்பது தான் இத உண்மை விளக்கம் ஆகும்.
11. அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்
விளக்கம் – அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.
இது அனைத்தும் இருந்தால் சமையல் அறியாத பெண்கூட சமையல் கற்றுக் கொள்வாள் என்பது பொருள் ஆகும்.
12. கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணையா?
விளக்கம் – குறுணி என்பது எட்டுப்படி கொண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது இதன் உண்மையான விளக்கம் ஆகும்.
13. பருவத்தே பயிர்செய்
விளக்கம் – பருவம் என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும்.
இல்லையென்றால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற பருவத்தில் செம்மையாக படிக்க வேண்டும். அதேபோல அந்தந்தப் பருவத்தில் பயிர்களை விதைத்து, மழை, காற்றில் வீணாகாமல் பருவத்தே அறுவடை செய்ய வேண்டும்.
இது போன்ற காலம் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.
14. காலம் பொன் போன்றது
விளக்கம் – உடல் வலிமையும், செல்வமும் மட்டும் மனிதனுக்கு வெற்றியைத் தேடித் தந்து விடாது. செய்யும் செயல் தான் வெற்றிக்கு அடிப்படை. காலம் கருதி செய்வதே வெற்றியை கொடுக்கும்.
ஏனெனில் காலத்தை தவறவிட்டால் மீண்டும் பெற முடியாது. எனவேதான் காலம் பொன் போன்றது என்றனர் நமது சான்றோர்கள்.
15. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
விளக்கம் – இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டவன், இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும்.
பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே.
அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றார்கள்.