அம்மா நினைவு அஞ்சலி கவிதை

amma ninaivu anjali kavithai in tamil

தாயை இழந்த பிள்ளைகள் அருகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் அனாதையாகவே உணர்வார்கள். ஏனெனில் தாய்க்கு நிகர் இவ்வுலகில் யாருமில்லை. அந்த இடத்தை நிரப்ப எவராலும் முடியாது.

அம்மா நினைவு அஞ்சலி கவிதை

தாயே எம் அம்மா
தாயாக வந்தெம்மைத்
தாங்கிக் கருத்தரித்து
மைந்தராய் எம்மை ஈன்று
பாலூட்டி – சீராட்டி
நோயேதும் தீண்டாது
நுணுகி எமைக் காத்து
ஆளாகி நாம் எழவே
ஆயிரமாம் தொல்லைகளை
நீ சுமந்து நின்றாயே
நாம் அதற்குப் பரிசாக
எதைத் தந்தோம் என் செய்தோம்
எம் நெஞ்சம் வேகிறதே..

எமக்குரிய நும்பணியை
நெஞ்சாரச் செய்து
நிறைவொன்றை எய்துதற்குள்
நில்லாது போய்விட்டாய்
எம் நெஞ்சம் வேகிறதே..

வெந்துயரில் நாம் மூழ்கி
வேதனையில் வெந்து துவண்டு
வெம்பி மனம் புண்ணாகி நிற்கின்றோம்
எம் தாயே அம்மா
ஆயிரம் பேர் அன்பு சொரிந்தாலும்
நின் தாயன்பிற்கு இணையாகுமா அம்மா
இனி எமக்கார் துணையோ வையகத்தில்.!


உங்கள் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்த எம் தாயே
நீங்கள் அணைந்து நான்கு ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்னிறுத்தி
என்றும் உங்கள் நினைவுடனே
வாழுகின்றோம்.
என்றும் எம் நினைவில் எம்முடனும்
நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆன்மா
சாந்தியடைய இறைவனை
என்றும் பிரார்த்திக்கின்றோம்.!


ஆண்டுகள் இரண்டு ஓடி
காலங்கள் கழிந்தாலும்
எங்கள் அன்பான அன்னையின்
நினைவுகள் என்றும் எம்முடன்
நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..!


வானத்து முழு நிலவாய் எம் வாழ்வு வளம் பெற
என்றும் ஆசியும், ஒளியும் பொழியும்
அன்பு அம்மாவே – எம் மன
வானில் உங்கள் நினைவுகள்
நீங்காது வலம்வர இறையருள் வேண்டும்.


மூன்று ஆண்டுகள் நகர்ந்தாலும்
எமைவிட்டு அகலாது உங்கள் அன்பான நினைவு
உங்கள் நினைவுகள் வருகையில்
நாம் நிலைகுலைந்து போகின்றோம்
உங்களை நினைக்காத நாளில்லை
எம்முன் என்றும் நிறைந்துள்ளீர்கள் அம்மா!


எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்
பண்பும் பாசமும் நிறைந்த ஒளி விளக்காய்
ஊரே போற்றும் உத்தமியாய்
தலைவனிற்கு தலைவியாய்
பார் போற்றும் அன்னையாய்
இல்லறத்தில் மருமகள்மாரிற்கு முன்னுதாரணமாய்
குலம் தழைத்துயர வளம் தரும் பேர்த்தியாய்
இறைபணியால் எமக்கோர் வழிகாட்டியாய்
நானிலம் போற்ற வாழ்ந்த அன்னையே
இரண்டாம் ஆண்டில் உம்பாதம் பணிகின்றோம்..
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!


எம் பாசத்தின் அருமைத் தாயே
கண்ணீராய் ஆற்றிவிட கண்ணீரும்
இல்லையம்மா
உங்களை இழந்து இரண்டு ஆண்டுகள் – ஆகிவிட்டதம்மா
தவமாய் தவமிருந்து பெற்ற ரத்தினத்தை கூட
ஆசையாய் உணவூட்டி அழகாய் ஆடையிட்டு
அன்பினால் அரணவணைக்கக் கூட
முடியாமல் அம்மா
உங்களை பாவி காலன் பறித்து விட்டானே
கதறி அழுகின்றோம் அம்மா
எங்கள் அன்புத் தெய்வம் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!


எமை பெற்றெடுத்துப் பாசத்துடன் அரவணைத்து
அரும்பாடுபட்டு எம்மை ஆளாக்கி வாழ்வின் வழிகாட்டியாய்
எம்மை வாழவைத்த அன்புத் தாயே!
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா..
நித்தமும் உங்களை நினைத்து நிழல் தேடி அலைகின்றோம்
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!


Read More:

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அப்பா