இந்த பதிவில் “பழமொழிகளும் அதன் கருத்துக்களும்” காணலாம்.
- பழமொழிகளும் அதன் கருத்துக்களும்
- Tamil Proverbs With Meaning
பழமொழிகளும் அதன் கருத்துக்களும்
1.எறும்பு ஊர கல்லும் தேயும்.
விளக்கம் – முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி.
கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் குறைவானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்மானம் உண்டாகும்.
அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமான செயலாக இருந்தாலும் எளிமையாக கூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.
2. ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி
விளக்கம் – ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும்.
இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து.
மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.
3. குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?
விளக்கம் – எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோ, தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது.
ஆனால் இங்கு சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது.
இருப்பினும் குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப்போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
விளக்கம் – கழுதையின் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதாவது வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சேதமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.
காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சேதமடைந்த சுவர்களையே நாடும்.
இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம். இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
5. தனி மரம் தோப்பாகாது.
விளக்கம் – பல மரம் சேர்ந்து நின்றால் தான் அதை தோப்பு என்பார்கள். ஒற்றை மரத்தை தோப்பு என்று சொல்ல முடியாது. அது எப்போதுமே ஒற்றை மரம்தான்.
அதே போல சமூகத்தில் மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அதை சமூகம் என்று சொல்ல முடியும். தனிமையாக வாழும் ஒருவரது வாழ்க்கை நிறைவு பெறாது.
ஒற்றுமை குடும்பத்திலும் சமூகங்களிலும் மிக மிக அவசியமான ஒன்று. சமூகத்தில் ஒருவராக தனிமையில் வாழ முயற்சி செய்தால் அது பெரும் வெற்றி அடைவதில்லை.
ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் அவர்கள் பெரும் வெற்றி அடைந்துவிடுவார்கள். இதுதான் இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
Tamil Proverbs With Meaning
6. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
விளக்கம் – உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய தவறான செயலாகும். உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும்.
அவர்கள் நம்மை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவும் தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும்.
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
7. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
விளக்கம் – ஒருவரது மனநிலையை அவரது முகத்தைக் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மனிதருக்கு முகபானைகள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும் என்பது இதன் விளக்கம் ஆகும்.
8. உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு.
விளக்கம் – கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது.
கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை எப்போதும் சீராக இருக்கும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
9. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
விளக்கம் – விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கும் காலத்தில் பருவ மழையை நம்பி பயிர் செய்வர்.
உரிய காலத்தில் வரவேண்டிய மழை பெய்யாமல் பொய்த்துப்போனால் பயிர் வளராமல் உரிய விளைச்சல் இல்லாமல் மண்ணும் பொய்த்துப்போகும்.
10. ஊரோடு ஒத்து வாழ்
விளக்கம் – ஊரோடு ஒத்து வாழ் என்றால், நீ வாழும் ஊர், சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி, அதனை பொருட்படுத்தாமல்
அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.
Read more from New Tamil Quotes.