அம்மா முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கவிதை

Amma ninaivu naal kavithai tamil

தாய்மை என்ற சொல்லே தாயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றது. தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் எதற்கும் ஒப்பிட முடியாது. அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்ப்பு இன்றி எமக்கு அள்ளிக்கொடுக்கும் உறவே அம்மா எனும் உறவாகும்.

அம்மாவின் இழப்பு என்பது வார்த்தைகளால் கூற முடியாது. ஆயிரம் உறவுகள் எமக்கு அருகில் இருந்தாலும் அம்மாவின் இழப்பு என்பதை எவராலும் ஈடு செய்ய முடியாது.

அம்மா முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கவிதைகள்

நின் நினைவில் நாளும் பொழுதும்
வாழ்வோம் அம்மா
கோயிலாய் எம்முள்ளமெல்லாம்
கொண்டே தெய்வமாய்
வீற்றருள் புரிவாயம்மா
உம் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டாண்டு காலமும் தவறாது
பிராத்தித்து நிற்போம்..
சாந்தி.. சாந்தி.. சாந்தி..!


அன்னை வடிவில் எமக்காய் அவதரித்த தெய்வமே..
இன்முகம், ஈகை குணம் உங்கள் போல் யாரம்மா..
நீங்கள் கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடம்
சென்ற இடமெல்லாம் எம்மை சிறக்கச் செய்கின்றது
உங்களின் கனிவான குணமும், கள்ளமில்லாக் குணமும்
காற்றோடு கலந்தாலும் எம்மை கண்ணீர் மல்கச் செய்கின்றது..
ஆண்டு ஒன்று பறந்தோடிப் போனாலும்
பரிவான பாசத்திற்கு ஏங்கி நிற்கின்றோம்..
வார்த்தைகளில் அடங்கா காவியம் நீங்கள்
குடும்பத்தின் ஆலமரமாகிய உங்களிடம்
பிள்ளைகள் நாம் ஆசி வேண்டி நிற்கின்றோம்.!


கோயிலாய், தெய்வமாய், குலவிளக்காய் எம் குடும்பத்தில் திகழ்ந்து,
எங்களையெல்லாம் அணைத்து, அரவணைத்து, வளர்த்திட்ட அன்னையே..
அன்று உங்களை இழந்த அந்த நாள் முதல் இன்று வரை,
சித்தம் கலங்கி-சிந்தனை கலங்கி, நாடி தளர்ந்து,
வாடி வலுவிழந்து பொலிவிழந்த நிலையில்,
தனிமரமாய் தவித்துப்போய் நிற்கின்றோம் தாயே..
எம் அனைவரையும் உங்கள் அன்பான அணுகுமுறையால் வழிநடாத்தி,
சிறந்ததொரு நல்வாழ்வை வழங்கி,
எம்மை பாசப்பிணைப்பில் ஒன்றாக்கிய நீங்கள்
இம்மண்ணுலகிலிருந்து மறைந்து
இன்றுடன் வருடம் ஒன்றும் கடந்து விட்டது தாயே..
உங்கள் ஆத்ம சாந்திக்காகவும், நீங்கள் மீண்டும் இம்மண்ணுலகில் பிறந்து
எம்முடன் வாழ வேண்டும் எனவும் நாங்கள் பிராத்திக்கின்றோம்..!


ஓராண்டு நகர்ந்தாலும் நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
உங்களை நினைக்காத நொடிகளில்லை அன்பினால் பண்பினால்
ஆளுமையினால் எங்கள் அனைவரதும் உள்ளங்களில் குடியிருக்கும்
எம் அன்னையை நாம் என்றென்றும் நினைத்திருப்போம்.!
அன்னையின் ஆத்மா இறைபாதம் சரணடைய பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..!


அன்பாலும் பண்பாலும் எம்மை அரவணைத்து
நல்வழிப்படுத்திய எங்கள் அன்புத் தாயே
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறவில்லை தெய்வமே
உங்கள் பிரிவுத் துயரம்..
உங்கள் நினைவலைகள்
உருவமாய் இல்லை என்றாலும்
தெய்வமாய் எங்களுடனே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..!


ஆண்டொன்று ஆனாலும் – அம்மா!
அகலவில்லை உன் பிரிவுத்துயர் – தாயே!
திருத்தொண்டு பலபுரிந்த திருமகளே- அம்மா!
திருவெண்பாவை தினத்தினிலே – தாயே!
சிவலோகம் திறந்திருந்தவேளை -அம்மா!
அவன் பாதம் தனையடைந்த -தாயே!
ஆனந்த பெருவாழ்வு பெற்று வாழ்க என்றும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!


எங்கள் அன்புத் தெய்வம் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களுடன் கூடி வாழ்ந்த காலங்கள்
என்றும் பசுமையானவை.
உங்கள் வழிகாட்டல்கள்
எங்களை வழிநடத்தும்.
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.!


Read More:

கண்ணீர் அஞ்சலி கவிதை வரிகள்