இந்த பதிவில் “உணவு பழமொழிகள் விளக்கம்” காணலாம்.
- உணவு பழமொழிகள் விளக்கம்
- Tamil Proverbs About Food With Meaning
- Tamil Proverbs With Meaning
உணவு பழமொழிகள் விளக்கம்
1.இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு
விளக்கம் – எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும்
பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.
2. வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி
விளக்கம் – முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.
ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
3. மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்
விளக்கம் – மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது.
எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.
4. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்
விளக்கம் – மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது.
பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது.
பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர் என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
5. விருந்தும் மருந்தும் மூன்று நாள்
விளக்கம் – சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும்.
மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.
Tamil Proverbs About Food With Meaning
6. அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்
விளக்கம் – சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன.
உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.
7. ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ
விளக்கம் – ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், காப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்ததே இந்த பழமொழியாகும்.
8. பசி வந்தால் பத்தும் பறக்கும்.
விளக்கம் – பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி.
9. கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.
விளக்கம் – குட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. “கூழாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கி கட்டு” என்ற பழமொழியும் இதுபோன்று வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை வேண்டும் என அறிவுறுத்துகிறது.
10. உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
விளக்கம் – அன்னதானத்தின் சிறப்பைப் பற்றிச் சொன்னது.
Read more from New Tamil Quotes.